×

போலீஸ் நிலைய லாக்கப் மரணம் வழக்கு 5 போலீசாரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை, :  சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமை செயலக காலனி போலீசாரால்  கைது செய்யப்பட்டார். அன்று இரவே அவர் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடந்து வந்தது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்வதாக அறிவித்தார். இதைதொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில், அந்த காவல் நிலையத்தில் இருந்த போலீசார் விக்னேஷை லத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

 இதனையடுத்து, குற்றவாளியான காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர் ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் பவுன்ராஜ் தவிர மற்ற 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான நேற்று முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் தரக்கூடாது. அப்படி ஜாமீன் தந்தால் அவர்கள் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். அரசு தரப்பின் இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



Tags : Chennai , Police Station Lock Death Case 5 Police Bail Petition Dismissed: Chennai First Sessions Court Order
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...