×

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு கிடங்கு அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரத்தில் சமையல் எரிவாயு கிடங்கு அமைப்பது தொடர்பாக கிராம மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரு தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி வட்டம் மங்காவரம் ஊராட்சியில் நத்தம் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேவேந்திரனுக்கு சொந்தமான காலி இடத்தில் மங்காவரம் ஊராட்சி மன்றத்த்தின் ஒப்புதல் பெற்று அனைத்து துறை ஒப்புதலோடு சமையல் எரிவாயு கிடங்கு அமைக்க இருந்தார்.இந்நிலையில், மங்காவரம் ஊராட்சியை சேர்ந்த ஒரு தரப்பினர் எரிவாயு கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்த பிரச்னை குறித்து சமாதான பேச்சுவார்த்தை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராமன் தலைமையிலும், கும்மிடிப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.அப்போது மங்காவரம் கிராமத்தின் ஒரு தரப்பினர் பேசுகையில், `இந்த இடத்தில் எரிவாயு கிடங்கு அமைக்கப்பட்டால் அப்பகுதியை ஒட்டி உள்ள மின்மாற்றி, எரிமேடை காரணமாக பெரிய விபத்து ஏற்படும். மேலும் திருவிழா, தீபாவளி காலங்களில் அந்த இடத்தில் பட்டாசுகள் வெடிப்பதால் விபத்து ஏற்படும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு எரிவாயு கிடங்கு அமைக்கக்கூடாது’ என்றனர்.

அதற்கு பதிலளித்த எரிவாயு கிடங்கு உரிமையாளர் ஆதரவு தரப்பினர், `கும்மிடிப்பூண்டியில் உள்ள 10க்கும் மேற்பட்ட எரிவாயு கிடங்குகள் குடியிருப்புகளில் இருந்து அரசு விதிகளின்படி 50 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாதுகாப்பாக செயல்பட்டு வரும் நிலையில் குடியிருப்புகளில் இருந்து 160 மீட்டர் தள்ளியும், மின்மாற்றியில் இருந்து 150 மீட்டர் தள்ளியும், எரிமேடையில் இருந்து 200 மீட்டர் தள்ளியும் இந்த கிடங்கு அமைப்பதால் விபத்து நடக்காது. திருவிழா காலங்களில் பொதுமக்கள் முன்னிலையில் கிடங்கு மூடப்படும். ஓராண்டு கழித்து வேறொரு இடத்தில் கிடங்கை மாற்றிக் கொள்ள தயார்’ என தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய வட்டாட்சியர் ராமன், `ஒரு வாரத்திற்குள் மங்காவரம் ஊராட்சி தலைவர் தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம் கூட்டியும், ஊர் மக்களோடு கலந்துபேசி அவர்களின் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என கூறினார். இதையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Tags : Gummidipoondi Governor's Office , Talks on setting up a gas depot at the Gummidipoondi Governor's Office
× RELATED கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர்...