×

வல்லம்பேடு கோயில் திருவிழா நடத்துவதில் மீனவ கிராமத்தில் இருதரப்பு பிரச்னை: சமாதான பேச்சுவார்த்தையில் கூச்சல் குழப்பத்தால் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த வல்லம்பேடு குப்பம் கிராமத்தில் சத்திரத்தான் தரப்பிற்கும் எல்லப்பன் தரப்பிற்கும் ஊர் கணக்கு வழக்கு தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி சத்திரத்தான் தரப்பினர் தாக்கியதில் எல்லப்பன் தரப்பை சேர்ந்த குணசேகர், அண்ணாதுரை கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.அதேபோல் இந்த மோதலில் சத்திரத்தான் தரப்பை சேர்ந்த 10 பேர் படுகாயமடைந்தனர். இதனைத்தொடந்து எல்லப்பன் தரப்பினர் சத்திரத்தான் தரப்பினரின் வீடுகளில் புகுந்து நடத்திய தாக்குதலில் சத்திரத்தான் தரப்பினர் ஊரில் இருந்து வெளியேறி 3 ஆண்டுகள் கழித்து மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் மீண்டும் ஊருக்கு மீண்டும் திரும்பினர். கடந்த 3 வருடங்களாக இரு தரப்பினரும் அமைதி காத்தது வந்தாலும், இந்த பிரச்னை காரணமாக வல்லம்பேடு கிராமத்தில் கோயில் திருவிழா தவிர பிற விழாக்கள் நடந்தாலும், அதில் சத்திரத்தான் தரப்பினர் பங்கேற்க இயலாமல் இருந்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை வல்லம்பேட்டில் படவேட்டம்மன் கோயில் திருவிழா நடத்த திட்டிமிட்டிருந்தனர். இதில் தாங்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சத்திரத்தான் தரப்பினர் வருவாய்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.இரு தரப்பையும் வரவழைத்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் எஸ்.ராமன் தலைமையிலும், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் முன்னிலையிலும் நடைபெற்றது. அப்போது எல்லப்பன் தரப்பினர், `இந்த வாரம் நாங்கள் திருவிழா நடத்தி கொள்கிறோம். அடுத்த வாரம் சத்திரத்தான் தரப்பினர் திருவிழா நடத்திக்கொள்ளட்டும் என்றனர்.
அதற்கு சத்திரத்தான் தரப்பினர், `திருவிழாவில் எங்களையும் ஒன்று சேர்த்து நடத்த வேண்டும். எங்களை பிரித்து நடத்தகூடாது’ என்றனர். தொடர்ந்து பேசிய வட்டாட்சியர் எஸ்.ராமன் இரு தரப்பினரும் இணைந்து சட்டம் ஒழுங்கு கெடாமல் திருவிழா நடத்த அறிவுரை கூறினார். அதனை எல்லப்பன் தரப்பினர் ஏற்றுக்கொள்ளாததால், திருவிழாவை நடத்த அனுமதி இல்லை என்றும், இரு தரப்பும் சமாதானத்திற்கு முன்வந்த பிறகு அடுத்த ஆண்டு திருவிழா நடத்திக் கொள்ளட்டும் என்றும் உத்தரவிட்டார். எல்லப்பன் தரப்பினர் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஊர் கூட்டத்தை கூட்டி முடிவெடுப்பதாக கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags : Fishenava ,Vallampede temple festival , Bilateral issue in Meenava village over Vallambedu temple festival
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!