ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கழிவுநீர் குளமாக மாறிய குடிநீர் குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கழிவுநீர் குளமாக மாறிய குடிநீர் குளத்தை தூர்வாரி சுற்றிலும்  பூங்காவாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகில் பழைய பேரூராட்சி அலுவலகத்திற்கு பக்கத்தில் தாமரை குளம் உள்ளது. இந்த குளத்தை சுமார் 45 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குடிநீர் குளமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த குளம் புதர்கள் மண்டி செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் இந்த குளத்தில் கலக்கிறது. பழைய பேரூராட்சி பின்புறம் உள்ள இறைச்சி கடைகளின் கழிவுகள் இந்த குளத்தின் அருகில் கொட்டப்படுகிறது. இதனால் இந்த குளம் கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. மேலும் தற்போது இந்த குளத்தில் செடி, கொடிகள் படர்ந்து குளமே தூர்ந்து விட்டது.எனவே, இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், கடந்த 3 வருடத்திற்கு முன்பு குளத்தை சுற்றி பூங்கா அமைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இதுகுறித்து கடந்த 2019ம் வருடம் ஜூலை மாதம் பேரூராட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தூர்ந்துவிட்ட தாமரை குளத்தை தூர்வாரி சீரமைத்து அதை சுற்றிலும் படிகட்டுகள் கட்டி பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து பஜார் பகுதி வார்டு உறுப்பினரும், பேரூராட்சி துணைத்தலைவருமான குமரவேல் கடந்த ஒருசில நாட்களுக்கு முன்பு நடந்த பேரூராட்சி கூட்டத்தில், `ஊத்துக்கோட்டை பேரூராட்சி 1970ம் ஆண்டு சிறு கிராமமாக இருந்தபோது இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பேருந்து நிலையத்திற்கும், பழைய பேரூராட்சி அலுவலகத்திற்கு இடையில் 45 ஆண்டு காலமாக உள்ள குளத்தில் தண்ணீர் குடித்து வந்தனர். இதை சீரமைக்கும் வகையில் குளத்தை தூர்வாரி பூங்கா அமைக்க வேண்டும். சுற்றிலும் படிகட்டுகள் கட்ட வேண்டும்’ எனவும் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார்.

Related Stories: