×

நாடே திவாலான நிலையிலும் அடங்காத பேராசை: பதவி வெறியால் 21வது சட்டத்திருத்தத்தை எதிர்க்கும் ராஜபக்சேக்கள்: புதிய கட்சி தொடங்கும் மாணவர்கள்: 10 எம்பிக்கள் திடீர் ஆதரவு

இலங்கை: கொரோனா ஊரடங்கு, சுற்றுலாத்துறை முடக்கம், கடுமையான பொருளாதார நெருக்கடி, வரலாறு காணாத அன்னிய செலவாணி சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு என்று பல்வேறு காரணங்களால் இலங்கையின் கஜானா மொத்தமாக காலியாகி இன்று திவாலாகும் நிலையில் உள்ளது. உணவு பொருட்கள், மின்சாரம், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், மருந்துகள், கழிப்பறை பேப்பர்கள் என அத்தியவாசிய பொருட்களுக்கு மணிக்கணக்கில் மக்கள் கையேந்தி காத்துகிடக்கும் பரிதாப நிலைதான் உள்ளது. இறக்குமதி செய்ய அரசிடம் காசு இல்லை. தலைநகர் கொழும்பு உட்பட நாடு முழுவதும் எங்கு திரும்பினாலும் பிஞ்சுகள் முதல் முதியவர்கள் வரை பசி, பட்டினி கொடுமையை அனுபவித்து வருகின்றனர். பல இடங்களில் இரண்டு வேளை உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க பணம் இல்லை. பெரும்பாலான இலங்கை மக்களுக்கு ஒரு கோப்பை பால் கூட, ஆடம்பரமாக மாறி விட்டது. உணவு இல்லாமல் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் கூட சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாடு கடும் பஞ்சத்தை நோக்கி செல்கிறது. ஆனால், ராஜபக்சேக்களின் பேராசை, பதவி வெறியால் இலங்கை இன்னும் மீள முடியாமல் தள்ளாடி கொண்டு இருக்கிறது.மகிந்த ராஜபக்சே அரசின் தவறான பொருளாதார கொள்கையால், நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த மாதம் 9ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். நாட்டின் உச்சப்பட்ச அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு, தவறாக வழிநடத்தி நாட்டை சீரழிவுக்கு கொண்டு சென்றதற்கு அதிபர் கோத்தபயவுக்கும் முக்கிய பங்கு உண்டு. இதனால், அவரும் பதவி விலக கோரி ‘கோத்தபய வீட்டுக்கு போ’ என, கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அதிபர் மாளிகை முன்பு மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையின் பொருளாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க குறைந்தபட்சம் ரூ30,000 கோடிக்கு மேல் தேவைப்படுகிறது.

வேஷம் போடும் கோத்தபய இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க புதிதாக பிரதமராக பதவியேற்ற ரணில் பல்வேறு வழிகளில் போராடி வருகிறார். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களும் கடனுதவி வழங்கி வருகின்றன. ஆனாலும், இலங்கையை மீட்க முடியவில்லை. இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு, தொலைநோக்கு பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தில் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதில் முக்கியமான ஒன்று, இலங்கை  அதிபரின் வானளாவிய அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் வகையில் 21வது சட்ட திருத்தம். இதை கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பிரதமரமாக ரணிலை பதவியேற்க பேச்சுவார்த்தை நடத்தியபோது, அதிபரின் அதிகாரத்தை குறைக்க தயார் என்று கோத்தபய தெரிவித்தார். ஆனால், தற்போது அதை எதிர்க்கிறார். மக்கள் மத்தியில் ஒரு வேஷம், அரசியலில் ஒரு வேஷம் போட்டு வருகிறார்.

ரணிலுக்கு முட்டுக்கட்டைஅதிபரின் அதிகாரத்தை குறைக்க பிரதமர் ரணில் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் கோத்தபய முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அதிபரின் அதிகாரத்தை குறைக்க அரசு தலைமை வழக்கறிஞர்களுடன் பிரதமர் ரணில் ஆலோசனை நடத்தி 21வது சட்டத்திருத்தத்தை உருவாக்கி உள்ளார். அதில், அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதை அமைச்சரவைக்கு ஒப்புதலுக்கு அனுப்ப முயற்சிகள் நடந்து வருகிறது. ஆயுதமாக எம்பிக்கள் முக்கிய எதிர்க்கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு அளித்து வருவதால், ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா எம்பிக்கள் மூலம் கோத்தபய மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். அமைச்சரவையில் பெரும்பாலும் ஆளும் கட்சி எம்பிக்களே உள்ளதால், இந்த சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதில் பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிட்டதிட்ட ஒரு மாதமாக அதிபர் அதிகாரங்களை குறைக்க நடக்கும் சட்டப்போராட்டத்துக்கு கோத்தபய பல்வேறு வகையில் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறார்.

அடுத்து பசில் ராஜபக்சே கோத்தபய பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இருப்பினும், அதிபர் பதவியில் இருந்து கோத்தபயவை வெளியேற்ற மக்களும், அரசியல் கட்சிகளும் உறுதியாக உள்ளனர்.ஆனால் தோற்றுபோன அதிபராக நான் போக மாட்டேன். இரண்டு ஆண்டுகள் பதவியை பூர்த்தி செய்வேன். அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கோத்தபய  தெரிவித்துள்ளார். இதனால், அடுத்த அதிபரை தேர்வு செய்யும் சூழல் வந்தால், அவருடைய மற்றொரு சகோதரரான பசில் ராஜபக்சேவை அதிபர் பதவிக்கு போட்டியிட வைக்க ராஜபக்சே குடும்பம் திட்டமிட்டுள்ளது. ஆனால், பசில் ராஜபக்சே இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமை வைத்துள்ளார். 21வது சட்டத்திருத்தத்தின் படி இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது, அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். இதனால் ‘குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல்’ இந்த சட்டத்திருத்தத்தை எம்பிக்களை தூண்டிவிட்டு தடுத்து வருகின்றனர் கோத்தபய மற்றும் பசில் ராஜபக்சே.

தப்புமா இலங்கை தற்போது, பிரதமரை பலவீனமாக்கும் முயற்சிகளில் ஆளும் கட்சி எம்பிக்கள் தயாராகி வருகின்றனர். இது மக்களின் போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கும் என்றே கூறப்படுகிறது. பாதகமாக உள்ள 21வது சட்டத்திருத்தத்தை ஏற்க கூடாது என்று கோத்தபய திட்டவட்டமாக உள்ளார். ‘ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா?’ சலுகைகள், ஆடம்பர வாழ்க்கை, அதிகாரம் என எல்லாத்தையும் அனுபவித்துவிட்ட கோத்தபய எதையும் இழக்க தயாராகவில்லை.  புதிய கட்சி அதிபர்  கோத்தபயவுக்கு எதிராக காலிமுகத்திடலில் போராடி வரும் மாணவர்கள் புதிய  அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. புதிய கட்சிக்கு  இதுவரை 10 எம்பிக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஆதரவு  தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத இளைஞர்களுக்கு இடம்  ஒதுக்குவதே இந்த புதிய கட்சியின் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.

ரூ7,761 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயம்

*இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடியை சீரமைக்க ரூ7,761 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.* ஒட்டுமொத்தமாக, உற்பத்தி, ஆடைகள், சேவைகள் மற்றும் சுற்றுலாத் துறையில் இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரூ11,331 கோடி மதிப்புள்ள 49 திட்ட முன்மொழிவுகளில் முதலீட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. திட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு தற்போதுள்ள முதலீடுகளின் விரிவாக்கங்கள் ஆகும்.*  இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகிறது. முதல் டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வருகை மூலம் ரூ19.4 கோடி வருமானம் கிடைக்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பொதுச்செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.* ஆஸ்திரேலியா வீரர்கள் வருகை மூலம் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும் என்று இலங்கை நம்புகிறது.

பாலியல் தொழிலில் 40,000 இளம்பெண்கள் இலங்கையில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ள பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதில், உயர்கல்வி படித்துக் கொண்டிருந்த மாணவிகள் கூட, நிதி நெருக்கடியால் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரரின் சகோதரி உட்பட 40,000 இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், ஸ்பாவில் ஏராளமான பெண்கள் வேலைக்கு சேர்கின்றனர். அங்கு வரும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

தோற்று போன அதிபராக போக மாட்டேன் அதிபர் கோத்தபய பதவி விலக கோரி போராட்டம் வலுத்து வருகிறது. இதுகுறித்து கோத்தபய நிருபர்களிடம் கூறுகையில், ‘மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எனக்கு 5 ஆண்டு காலம் பதவி உள்ளது. இன்னும் எனக்கும் 2 ஆண்டு கால பதவி உள்ளது. தோற்றுப்போன அதிபராக என்னால் போக முடியாது. எனது பதவி காலத்தை பூர்த்தி செய்வேன். நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அன்றும்...  இன்றும்....

* கடந்த 2015ம் ஆண்டு, இலங்கையின் அதிபராக மைதிரிபால சிறிசேனா இருந்தபோது, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவால் அரசியலமைப்பின் 19வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதில், அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது.* அதிபராக கோத்தபய பதவியேற்ற பின் 2020ல் 20வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதில் அதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரங்கள்  வழங்கப்பட்டது.* தற்போது மீண்டும் அதிகார பிரச்னை தலைதூக்கி உள்ளதால், 21வது சட்டத்திருத்தத்தை செய்ய பிரதமர் ரணில் தீவிரமாக போராடி வருகிறார்.

அடுத்த வாரம் தாக்கல் 21வது சட்டத்திருத்தம் நேற்று முன்தினம் நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. அனைத்து தரப்பினரும்  முன்மொழியப்பட்ட திருத்தங்களை ஏற்றுக்கொண்ட பின்னரே இதற்கு ஒப்புதல் அளிக்க  முடிவு செய்யப்பட்டது. ஆளும்  கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்பால், அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவிகயா  கட்சியினர், சட்ட திருத்த வரைவு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் இருப்பதால், அதுவரை அரசு காத்திருக்க வேண்டும். இல்லையென்றால்,  இச்சட்ட திருத்தம் நீர்த்து போக செய்யப்பட்டு, கோத்தபய கூடுதல் அதிகாரங்களை  அனுபவிக்க வழி செய்வதாகும், என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கால் பதித்த அதானி குழுமம் இந்தியாவில் துறைமுகம், அனல் மின்நிலையங்கள், காற்றாலை, சிமெண்ட் என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம், தற்போது அண்டை நாடான இலங்கையில் கால் பதித்துள்ளது. இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதற்காக மருபேனி கார்ப் மற்றும் இந்தியாவின் அதானி குழுமம் முன்மொழிவை வைத்துள்ளது. இதுகுறித்து, இலங்கை முதலீட்டு வாரியத்தின் இயக்குநர் ஜெனரல் ரேணுகா வீரகோன், ‘மருபேனி நிறுவனம் 800 மெகாவாட் சூரிய மற்றும் காற்றாலையை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைத்துள்ளது, அதானி குழுமம் ஏற்கனவே இதேபோன்ற 500 மெகாவாட் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை முடித்துள்ளது. இது 18-24 மாதங்களில் முடிவடையும் என்று நம்புகிறது. இலங்கை அரசாங்கம் இந்த மாதம் எரிசக்தி துறையை நிர்வகிக்கும் சட்டத்தை மறுசீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரிய அளவிலான திட்டங்களை மிகவும் சுமூகமாக செயல்படுத்த அனுமதிக்கும்’ என்றார்.

சீனா திடீர் ஆதிக்கம் இலங்கைக்கு இந்தியா பல்வேறு வகையில் உதவி வருவதால், இந்தியாவிடம் உறவை மேம்படுத்த இலங்கை திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. இதை பார்த்த சீனா, தற்போது இலங்கைக்கு அவசரகால மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது. அதிபராக மகிந்தா இருந்தபோது சீனாவிடம் வாங்கிய கடனுக்காக அம்பந்தொட்டை துறைமுகத்தை, அதிபர் மைதிரிபால சிறிசேனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டார். அந்த துறைமுகத்தை விரிவாக்கம் செய்து, ஒரு நகரத்தை கடலில் உருவாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளது.  தற்போது, 80,000 டன் எடையுள்ள சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல், மூன்று கப்பல்களுடன் கொழும்பு துறைமுகத்திற்கு சென்றுள்ளது. இந்த கப்பல்கள் இலங்கையின் பொருளாதார மீட்புக்காவும், ஜெயா கொள்கலன் முனையம் மற்றும் கிழக்கு கொள்கலன் முனையம் உட்பட துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஆதரவாகவும் செயல்படும் . இதேபோல், இலங்கையில் எரிசக்தி ஆலைகள் அமைப்பதற்காக முதலீடு செய்ய இரண்டு சீன நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.

யூரியா வாங்க ரூ42,685 கோடி இந்தியா கடன் இலங்கையில் உரம், யூரியா தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதால் உணவு பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. இதை தடுக்க யூரியாவை கொள்முதல் செய்ய ரூ42,685 கோடி கடனை இந்தியாவிடம் இலங்கை கேட்டுள்ளது. இதனை வழங்க இந்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த 3 வாரம் மிகவும் கடினம் பிரதமர் ரணில் நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘‘இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான நிதி நெருக்கடியின் போது இலங்கைக்கு கடன்கள் மற்றும் உதவிகளை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளது. எப்போதும் வலுவாக இருந்த இந்த நாடுகளுடனான உறவுகள் இப்போது முறிந்துள்ளன. அந்த உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நாடு மாதத்திற்கு ரூ.3,750 கோடி எரிபொருளுக்காகச் செலவிடுகிறது. தற்போதைய உலகளாவிய நெருக்கடி எண்ணெய் விலையை உயர்த்தும் அபாயம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் உலக எண்ணெய் விலை 40 சதவீதம் வரை உயரும் என்று மதிப்பிடுகின்றனர். அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருளுக்காக ரூ.2.47 லட்சம் கோடி தேவை. அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருள் தொடர்பாக நமக்கு கடினமான காலமாக இருக்கும். நாம் அனைவரும் எரிபொருளையும் எரிவாயுவையும் முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நேரம் இது. அத்தியாவசியமற்ற பயணத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இந்த கடினமான மூன்று வாரங்களை ஒற்றுமையாகவும் பொறுமையாகவும் எதிர்கொள்வோம்” என்று பிரதமர் கூறினார்.



Tags : Nadee ,Rajapaksas ,Post Mania , Students starting a new party: 10 MPs abrupt support
× RELATED 70 ஆண்டுக்குப் பின் இலங்கையில் 2000...