சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் ஆதாரங்களை வெளியிட்ட பாஜ எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அம்னீஷியா பப்பில் தனியார் பள்ளி  நிர்வாகத்தின் பரிந்துரையின் கீழ் கடந்த மாதம் 28ம் தேதி 150 மாணவ, மாணவிகளுக்காக பேர்வெல் பார்ட்டி நடந்தது. இதில் பங்கேற்ற மைனர் சிறுமியை வீட்டில் விடுவதாக அழைத்துச்சென்ற 5 பேர் காரிலேயே வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஜுப்ளி ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். முன்னதாக, எம்.ஐ.எம் கட்சி பகதூர்புறா எம்எல்ஏ மகன் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பாஜ குற்றம்சாட்டிய நிலையில் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, துப்பாக்க சட்டமன்றத் தொகுதி பாஜ எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் கடந்த 4ம் தேதி நிருபர்களை சந்தித்து, சிறுமியுடன் காரில் எம்.ஐ.எம் கட்சி எம்எல்ஏ மகன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக செயல்பட்ட பாஜ எம்.எல்.ஏ ரகுநந்தன் ராவ் மீது ஐபிசி 228 ஏ சட்டப்பிரிவின் கீழ் ஐதராபாத் ஹபிட்ஸ் காவல் நிலைய  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: