×

யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஜாமீன் ரத்து சர்ச்சை வீடியோவை நீக்காவிட்டால் யூடியூப் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருச்சியை சேர்ந்தவர் யூடியூபர் சாட்டை துரைமுருகன். இவரை முன்னாள் முதல்வர் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறுவீடியோ வெளியிட்டதாக திருப்பனந்தாள் போலீசார் கடந்தாண்டு கைது செய்தனர். இந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதற்காக, ‘‘இனி வரும் காலங்களில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேச மாட்டேன்’’ என சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் உறுதிமொழி உத்தரவாதம் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதை அவர் மீறியதால்  ஜாமீனை ரத்து செய்யக் கோரி திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் தரப்பில் ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: யூடியூபை தவறாக பயன்படுத்துவதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம். முன்னாள் முதல்வர்(கலைஞர்) குறித்து தவறாக அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் பிரமாண பத்திரத்தில் கூறிய உத்தரவாதங்களை தொடர்ந்து மீறியுள்ளார். தற்போதைய முதல்வர் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். தனது வீடியோவை அதிகம் பேர் பார்ப்பதால், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து அவதூறாக பேசியுள்ளார். இதுபோன்ற அவதூறான, தவறான யூடியூப் வீடியோக்களை ஊக்கப்படுத்த முடியாது. சிலரது நிறுவனத்தினர் வருவாய் ஈட்டும் நோக்கத்தில் வேண்டுமென்ற தவறான வீடியோக்களை வெளியிடுகின்றனர்.

குறிப்பாக ஆபாச வீடியோக்கள், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தயாரித்தல், சாராயம் தயாரித்தல் குறித்த வீடியோக்களும் யூடியூப்பில் உள்ளன.  இதுபோன்ற வீடியோக்கள் இளைஞர்களிடமும், சிறுவர்களிடமும் சுலபமாக போய் சேருகின்றன. பலர் மனரீதியான குழப்பத்தை சந்திக்கின்றனர். சமூக வலைதளம் மூலம் கிடைக்கும் வருவாய்க்காக சாட்டை துரைமுருகன் தொடர்ந்து அவதூறு பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். எனவே, அவருக்கு வழங்கிய ஜாமீனை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது. சர்ச்சை மற்றும் பிரச்னைக்குரிய வகையில் வெளியாகும் வீடியோக்களை நீக்கம் செய்யவும், தடுக்கவும் வேண்டும். மீறும்பட்சத்தில் யூடியூப் மீது காவல்துறை தரப்பில் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags : YouTube ,Duraimurugan , ICourt branch orders police to take action if YouTube video of Duraimurugan's bail cancellation controversy is not deleted
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!