14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்பு பயிற்சி அளிக்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையினை கொண்டுள்ளது. இங்குள்ள 608 மீனவ கிராமங்களில் 10.48 லட்சம் மீனவ மக்கள் வாழ்கிறார்கள். கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளால் விலைமதிப்பற்ற மனித உயிர்களை இழக்க நேரிடுகிறது. இதுபோன்ற விபத்துகளை குறைப்பதற்கும், நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை காப்பாற்றிடும் வகையிலும் மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்காக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சி தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் ரூ53 லட்சம் மதிப்பீட்டில் ஐடியுஎஸ் விளையாட்டு மற்றும் பாதுகாப்பு என்ற நிறுவனம் மூலம் தமிழகத்தின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு வழங்கப்படும்.இந்த பயிற்சி மீனவ இளைஞர்களின் இயற்கையான நீச்சல் திறன்களை மேம்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமணைக்கு அழைத்துச் செல்லும் முன்னர் அவர்களுக்கு தேவையான முதலுதவி அளிப்பதற்கு உறுதுணையாக அமையும். இப்பயிற்சி முடித்தவர்கள் மூலம் அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர கால முதலுதவி சிகிச்சை அளித்திடவும், கடற்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும் இயலும்.பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களின் சேவையை புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் பயன்படுத்திக்கொள்ள இயலும். இப்பயிற்சி மூலம் தமிழகத்தை சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை பாதுகாப்பு, மீட்புப் பணிகள், கடற்கரை விடுதிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பும் கிடைப்பதற்கு உதவிகரமாக அமையும்.

நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக கோவளத்திலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: