×

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி சேர்க்கை கிடையாது: பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் இந்த ஆண்டு குழந்தைகள் சேர்க்கை நடக்காது  என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, சமூக நலத்துறையே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த உள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 32 ஆயிரம் இயங்கி வருகின்றன. இவற்றில் தமிழ்வழிக் கல்வி தவிர ஆங்கில வழியிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்வது இதனால் குறைந்தது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, கடந்த அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டில் 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளின் அருகில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மேற்கண்ட அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளை பாதுகாக்க பத்தாம் வகுப்பு படித்த பெண்களை ஆசிரியர்களாக நியமனம் செய்தனர். அத்துடன், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக இந்த மையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் மேற்கொண்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசு தொடங்கவில்லை. ஆனால் 2381 மையங்கள் தொடங்கப்பட்ட நிலையில் அவை தனியாரின் பராமரிப்பிலும் விடப்பட்டன. அந்த குழந்தைகளுக்கு வேண்டிய சீருடைகள், புத்தகங்களை சமூக நலத்துறை வினியோகம் செய்து வந்தது. இந்த திட்டம் மேலும் அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று அரசு அப்போது அறிவித்தது.

தற்போது அமைந்துள்ள புதிய அரசின் திட்டப்படி, இந்த கல்வியாண்டில் மேற்கண்ட அங்கன்வாடி மையங்களில் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் குழந்தைகள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டுமே குழந்தைகள் தொடர்ந்து சேர்க்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு கல்வியும் கற்பிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடக்க கல்வித்துறையில் மாணவர்கள் சேர்க்கையின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்கனவே அங்கன்வாடி மையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளில் பணியிடங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சமூக நலத்துறையே மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை பராமரிக்க உள்ளது.

Tags : LGG ,UKG , No LGG, UKG enrollment in government schools: School Education abrupt decision
× RELATED விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா