×

சர்ச்சை கருத்தால் 15 நாடுகள் எதிர்ப்பு எதிரொலி செய்தித் தொடர்பாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பாஜ மேலிடம் உத்தரவு

புதுடெல்லி: முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்தால் வளைகுடா நாடுகளின் கடும் அழுத்தத்தை ஒன்றிய அரசு சந்தித்து வரும் நிலையில், பாஜ செய்தித் தொடர்பாளர்கள் மத விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்து கூறக் கூடாது என திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாஜ கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதன் காரணமாக, நுபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்து பாஜ மேலிடம் நடவடிக்கை எடுத்தது. ஆனாலும், சமூக விரோத நடவடிக்கைக்காக அவரை கைது செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, நுபுர் சர்மா பேச்சு சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையை புண்படுத்தி இருப்பதாக வளைகுடா நாடுகள் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், லிபியா, மலேசியா, பஹ்ரைன் உட்பட 15க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்களும் கூட மத விவகாரத்தில் இந்தியாவுக்கு பாடம் நடத்தி வருகிறது. மேலும், வளைகுடா நாடுகளில் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென்ற பிரசாரங்களும் வலுவடைந்து வருகின்றன. அங்கு ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், பாஜ செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்சி மேலிடம் நேற்று திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில்,
* அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டும்.
* தொலைக்காட்சி விவாதங்களில் மத விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது. மத நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் கருத்து கூறக் கூடாது.
* ஆவேசமாகவும், வரம்பு மீறியும் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
* யாருடைய தூண்டுதலின் பேரிலும் கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை மீறக் கூடாது.
* நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன், அதற்கான தலைப்பைப் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். விவாதத்திற்கு முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.
* கட்சிக் கொள்கைகளில் இருந்து விலகக் கூடாது. கவனமாக பேச வேண்டும்.
* ஏழைகளின் நலனுக்காக பாஜ அரசு செய்யும் பணிகளை எடுத்துரைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

* நுபுர் சர்மாவுக்கு போலீஸ் சம்மன்
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நுபுர் சர்மா மீது தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நுபுர் சர்மாவுக்கு மும்ப்ரா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும், மும்பையில் உள்ள பைடோனி போலீசாரும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நுபுர் சர்மா அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : BJP , 15 countries suddenly restrict opposition spokespersons over controversy: BJP orders upstairs
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...