×

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட மான நஷ்ட வழக்குகளுக்கு தடை; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த மூன்று வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பான தகவல்கள் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த பதிவுகள் தொடர்பாக அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ஆர்.சந்திரசேகர் ஆகியோரின் சார்பில் மான நஷ்ட ஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பேஸ்புக் பதிவு, டிவிட்டர் பதிவு மற்றும் கூகுள் இணையதளத்தில் உள்ள தகவல் தொடர்பாக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தொடரப்பட்ட 3 வழக்குகளில் அறப்போர் இயக்கம் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தனி நீதிபதி முன்பு விசாரணையில் உள்ள  இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் அறப்போர் இயக்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பதிவிட்ட ஓராண்டிற்குள் வழக்கு தொடராமல் 3 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஊழல் தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவதை இதுபோன்ற வழக்குகள் மூலம் தடுக்க நினைக்கிறார்கள் என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி முன்பு விசாரணையில் உள்ள மூன்று வழக்குகளின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து 6 வாரங்களில் கே.சி.பி. இன்ப்ரா, ஆர்.சந்திரசேகர் ஆகியோர் பதிலளிக்குமாறு  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Crusaders Movement ,Chennai High Court , Ban on defamation suits filed against the crusade movement; Chennai High Court order
× RELATED பொய் தகவல்களை கூறி வாரிசுரிமை சான்று...