×

தஞ்சையில் இன்று குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் 5 அமைச்சர்கள் ஆலோசனை: 7 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு

தஞ்சை: தஞ்சையில் இன்று குறுவை சாகுபடி தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் 5 அமைச்சர்கள், 7 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என கூறி உள்ளார்.

இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், பயிர்க்கடன் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (7ம் தேதி) காலை 9.30 மணிக்கு துவங்கியது. கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், அரசு கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்(தஞ்சை), காயத்திரி கிருஷ்ணன்(திருவாரூர்), அருண் தம்புராஜ்(நாகை), லலிதா(மயிலாடுதுறை), ரமண சரஸ்வதி(அரியலூர்), சிவராசு(திருச்சி) மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வேளாண், கூட்டுறவு, நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Thanju , Tanjore, Kuruvai cultivation, consultation of ministers, participation of collectors
× RELATED தஞ்சையில் சோகம்: இருசக்கர வாகனம் மீது...