×

சத்தியவாணி முத்து நகரில் கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் பொதுமக்களை மறுகுடியமர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை..!!

சென்னை:  பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-59க்குட்பட்ட சத்தியவாணி முத்து நகரில் கூவம் நதிக் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளுக்கு மறுகுடியமர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு   தலைமையில் இன்று ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-59க்கு உட்பட்ட சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா காந்தி நகர் பகுதியில் கூவம் நதிக் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து வாழ்ந்து வந்த பொதுமக்களை அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்ய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பில் தகுதியுடைய 2,092 குடும்பங்களுக்கு குடியிருப்பு ஆணை பெறப்பட்டு 1,914 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு பெரும்பாக்கம் குடியிருப்பில் குடியமர்த்தப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களிடம் மீதமுள்ள 178 குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்கள் வாழும் பகுதிக்கு அருகாமையிலேயே மறுகுடியமர்வு செய்யுமாறு கோரிக்கை அளித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, 178 குடும்பங்களுக்கு கே.பி.பார்க் பகுதி-2 திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள இந்த 178 குடும்பங்களை சுமூகமாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியான கே.பி.பார்க் பகுதி-2 திட்டப்பகுதியில் மறுகுடியமர்வு செய்வது தொடர்பாக இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட சேவைத் துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட 178 குடும்பங்களை உடனடியாக கே.பி.பார்க் குடியிருப்பு பகுதிக்கு மறுகுடியமர்வு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பொதுப்பணித்துறை, மின்துறை, சென்னை மாவட்ட வருவாய்த்துறை மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்து தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், துணை ஆணையாளர்கள் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., (பணிகள்) அவர்கள், திரு.விஷூ மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி) அவர்கள், திருமதி டி. சினேகா, இ.ஆ.ப., (கல்வி) அவர்கள், திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்) அவர்கள், திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்) அவர்கள், மண்டலக் குழுத் தலைவர் திரு.பி. ஸ்ரீராமுலு அவர்கள், மாமன்ற உறுப்பினர் திருமதி.க. சரஸ்வதி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்கள், மின்துறை அலுவலர்கள், சென்னை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Sekarbabu ,Koovam ,Satyavani Muthu Nagar , Satyavani Muthu Nagar, Koovam Riverside, Resettlement, Minister Sekarbapu
× RELATED திருவேற்காடு கூவம் ஆற்றங்கரையோரம்...