பாராசிட்டமால் உட்பட 16 மருந்து, மாத்திரைக்கு டாக்டரின் பரிந்துரை சீட் தேவையில்லை; ஒன்றிய சுகாதார அமைச்சகம் முடிவு

புதுடெல்லி: பாராசிட்டமால் உட்பட 16 மருந்து, மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை சீட் தேவையில்லை என்ற முடிவை ஒன்றிய சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம், கடந்த 1945ம் ஆண்டின் மருந்து விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சில மருந்துகளை சில்லறை விற்பனையில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  இந்த மருந்துகளை ஓவர்-தி-கவுண்டர் பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையால் மருத்துவரிடம் மருந்து பரிந்துரை சீட் பெறாமல், குறிப்பிட்ட மருந்துகளை விற்பனையாளர்கள் விற்க முடியும். பொதுவான மருந்துகளை மக்கள் எளிதில் வாங்குவதற்காக, இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மருந்துகளின் பட்டியலில், பாராசிட்டமால் உட்பட 16 பொதுவான மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கிருமிநாசினிகள், ஈறு அழற்சி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மவுத்வாஷ் குளோரோஹெக்சிடின் (குளோரோஹெக்சிடின்), டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபிரோமைடு லோசன்ஜ்கள், பாக்டீரியா எதிர்ப்பு முகப்பரு மருந்து, பூஞ்சை எதிர்ப்பு கிரீம்கள், வலி நிவாரணி மருந்துகள் ஆகியவை அடங்கும். அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்கு மேல் இந்த மருந்துகளை நோயாளிக்கு கொடுக்கக் கூடாது. அவரை மருத்துவரின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்த வேண்டும். இது தொடர்பான ஆலோசனைகளை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: