×

‘தேர்வில் மதிப்பெண் குறைவாக கிடைக்கும்’ கடிதம் எழுதி வைத்துவிட்டு 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: பூந்தமல்லி அருகே சோகம்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே  தேர்வில் மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என கடிதம் எழுதிவைத்துவிட்டு 10ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை  செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, நடராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவரது மகன் சதீஷ் (16).  அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.  தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் படுக்கையறைக்கு சென்ற சதீஷ் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை.

இன்று காலை வரை வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது சதீஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, தற்கொலைக்கு முன்பு சதீஷ் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ‘10ம் வகுப்பு பொது தேர்வில் எனக்கு மதிப்பெண் குறைவாகதான் கிடைக்கும்.  

எனக்கு படிக்க விருப்பமில்லை. எனது படிப்புக்காக செலவு செய்து சிரமப்பட்டு வருகிறீர்கள். இது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் படிக்க விருப்பமில்லாமல் தற்கொலை செய்தாரா? அல்லது பள்ளியில் ஏதாவது பிரச்னையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம்  நசரத்பேட்டை பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Poonamallee , 10th class student commits suicide after writing letter 'Low marks in exams': Tragedy near Poonamallee
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...