கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதியில் பராமரிப்பின்றி ஓட்டை விழுந்து பழுதடைந்த பேருந்து நிழற்குடை-புதிதாக கட்டித்தர கோரிக்கை

கறம்பக்குடி : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒடப்பவிடுதி ஊராட்சி அமைந்துள்ளது.இந்த ஊராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் பத்து தாக்கு செல்லும் சாலை அருகே உள்ள சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் மற்றும் பேருந்து பயணிகளின் நன்மைக்காக பேருந்து நிறுத்த நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது இதன் காரணமாக பொது மக்கள் பெரிதும் பயன் அடைந்தனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் யாரும் கண்டு கொள்ளாததாலும், சீரமைக்கப்படாததாலும் இந்த பேருந்து நிறுத்த நிழற்குடை பராமரிப்பின்றி பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ளது.இந்த நிழற்குடையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருபக்க சுவர் இடிந்து விழுந்து பெரிய ஓட்டை விழுந்து ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை பக்கம் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகமும் இடிந்து ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையை அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என ஒடப்பவிடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: