தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.

அக்னி நட்சத்திர காலங்களில் மழை பெய்ததால் ஓரளவு பெரிய அளவிலான வெயில் பாதிப்பில் இருந்து மக்கள் தப்பித்து வந்தனர். ஆனால், தற்போது மீண்டும் வெயிலின்  தாக்கம் அதிகரித்து வருகிறது. மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது. இந்த வெயிலின் உக்கிரத்தை, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அவ்வப்போது பெய்யும் மழை சற்று தணித்து வருகிறது.

இந்நிலையில்,தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. தமிழகத்தில் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Related Stories: