முகமது நபிகள் குறித்து சர்ச்சை பேச்சு... நுபுர் சர்மாவுக்கு போலீஸ் பாதுகாப்பு... ஜூன் 22ல் நேரில் ஆஜராக சம்மன்!!

மும்பை : பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மா ஜூன் 22ல் ஆஜராக மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய டிவி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பாஜ தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல், டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரை கட்சியில் இருந்து பாஜ நீக்கி உள்ளது.

ஆனாலும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரும் அழுத்தமாக மாறி உள்ளது. துபாய், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்நாடுகளின் இந்திய தூதர்களுக்கு சம்மன் அனுப்பியது. மேலும், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே நுபுர் சர்மா மற்றும் அவரது குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை கருத்து விவகாரம் தொடர்பாக தனக்கும் தனது குடும்பத்திற்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக நுபுர் சர்மா டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இதனிடையே முகமது நபிகள் குறித்த பேச்சுக்கு ஜூன் 22ல் நேரில் ஆஜராகி விளக்கம் தர தானே மும்பரா போலீஸ் நுபுருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

Related Stories: