×

பூதலூர் பகுதியில் கல்லணைக் கால்வாய் தண்ணீரை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பு-சாகுபடி பணிகள் தாமதமாவதாக கவலை

வல்லம் : தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், சித்திரக்குடி ஆலக்குடி கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் கல்லணை கால்வாய் தண்ணீரை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால் சாகுபடி பணிகள் தாமதமாகிறது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில் ஆற்றுப் பாசனத்தை நம்பி விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி உட்பட பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதில் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, ரெட்டிப்பாளையம் உட்பட சுற்றுப்பகுதிகளில் புதுஆறு என்று அழைக்கப்படும் கல்லணை கால்வாய் தண்ணீர்தான் சாகுபடி பணிகளுக்கு பாய்கிறது. தஞ்சை மாநகரில் கல்லணை கால்வாய் பாலத்தை (இர்வின் பாலம்) இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் மேட்டூரில் மே மாதத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து கல்லணையில் இருந்து கடந்த 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டாலும் தஞ்சையில் பாலம் பணிகள் நடப்பதால் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கபடவில்லை. இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு தஞ்சை கல்லணைக்கால்வாயின் புதுப்பாலத்தில் ஒருபுறம் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கல்லணைக்கால்வாயில் 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் சற்று அதிகரிக்கப்பட்டு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் கல்லணைக்கால்வாயில் முழுமையாக தண்ணீர் திறக்கப்படாததால் பூதலூரின் ஒரு பகுதி, சித்திரக்குடி உட்பட பகுதிகளில் இன்னும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.இது குறித்து சித்திரக்குடியை சேர்ந்த விவசாயி மகேந்திரன் கூறியதாவது: சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, வல்லம், ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள வயல்களுக்கு கல்லணைக்கால்வாய் தண்ணீர்தான் பாயும். தற்போது 10 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் கடந்த ஞாயிறன்றுதான் 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று 400 கன அடியாக திறந்துள்ளனர்.

இது இப்பகுதியை வந்து சேராது. முழுமையாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தால் மட்டுமே இப்பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ள இயலும். அப்போதுதான் தண்ணீர் மேடான இடங்களுக்கு வேகமாக செல்லும். கல்லணைக்கால்வாய் தண்ணீரை எதிர்பார்த்து 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயிகள் பணிகளை செய்யாமல் உள்ளனர்.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் போதுமானது அல்ல. இனியும் காலம் தாழ்த்தாமல் கல்லணைக்கால்வாயில் கூடுதல் தண்ணீரை திறந்து விட்டால்தான் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ள இயலும். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் வராத நிலையில் விவசாயிகள் சந்தேகத்துடன் சாகுபடி பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Puthalur , Vallam: Thanjavur district, Puthalur, Chithrakudi, Alakkudi, Kalvirayanpet and many other places are awaiting canal water.
× RELATED பூதலூரில் 1500 பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி