மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மஞ்சப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சசூழலை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இச்சட்டம் நடைமுறையில் இருந்தாலும், இன்னும் சிலர் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் முழுமையாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டும், அதேசமயம் எளிதில் மக்கக்கூடிய துணிப்பபைகளை பயன்படுத்த தற்போது தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தற்போது மாவட்டம் தோறும் இந்த மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பைகளை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில், கலந்துக் கொண்ட மாவட்ட கலெக்டர் அம்ரித், நீலகிரி மாவட்டத்தில் முற்றிலுமாக பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க ெபாதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதற்கு மாற்றாக, எளிதில் மக்கக் கூடிய துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். மேலும், வியாபாரிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியின் போது, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள், பார்மசி கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் லிவிங்ஸ்டன், எஸ்.பி.,ஆசிஷ்ராவத், வன அலுவலர் சச்சன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: