தேர்வெழுத அனுமதிக்க கோரி கைக்குழந்தையுடன் மாணவி திடீர் தர்ணா-வாலாஜாவில் பரபரப்பு

வாலாஜா : வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பிஏ தமிழ் 3ம் ஆண்டு பயிலும் மாணவி காமாட்சி பிரசவ விடுப்பு எடுத்திருந்த நிலையில், தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் கூறுவதால் மாணவி  கைக்குழந்தையுடன் கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஆயிலம் குமணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி காமாட்சி(25). இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் காமாட்சி வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த சில மாதங்களாக பிரசவ விடுப்பில் இருந்த காமாட்சி, குழந்தை பெற்ற பின்பு மீண்டும் கல்லூரிக்கு நேற்று வந்தார்.

அப்போது கல்லூரி நிர்வாகம், நீண்ட விடுப்பு எடுத்ததால் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காமாட்சி, தனது கைக்குழந்தையுடன் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனக்கூறி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து காமாட்சியிடம் கல்லூரி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்படி திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு அலுவலருக்கு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டி கடிதம் எழுதி கல்லூரி முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக கல்லுரி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.

அதன் பின்பு மாணவி காமாட்சி தனது கைக்குழந்தை மற்றும் கணவருடன் அங்கிருந்து சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கல்லூரி மாணவிகள் பேறு கால விடுப்பின்போது வருகைபதிவு கணக்கிடாமல் கருணை அடிப்படையில் மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: