வெறுப்புணர்வை தூண்டுவதை நிறுத்திவிட்டு அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் : இந்தியாவுக்கு ஐக்கிய அரசு அமீரகம் கடும் கண்டனம்!!

புதுடெல்லி: முகமது நபிகள் குறித்து பாஜ தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதை கண்டித்து உபி கான்பூரில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்து பாஜ நடவடிக்கை எடுத்தது. அதே போல, கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்ட டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெரும் அழுத்தமாக மாறி உள்ளது. துபாய், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்நாடுகளின் இந்திய தூதர்களுக்கு சம்மன் அனுப்பியது. மேலும், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் கூட இந்த விவகாரத்தில் இந்தியாவை கண்டித்துள்ளது. முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா பொது மன்னிப்பு கோர வேண்டுமென குவைத் அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளருக்கு ஐக்கிய அரசு அமீரகம், ஜோர்டன், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறுப்புணர்வை தூண்டுவதை நிறுத்திவிட்டு அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும். மனிதர்களுக்கு இடையே சகிப்புத் தன்மையை நிலைநாட்டுவது சர்வதேச சமூகத்தின் பொறுப்பு,எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: