நடிகை பலாத்கார வழக்கு: விஜய் பாபுவுக்கு உதவிய நடிகரிடம் போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார்.இதற்கிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி விஜய் பாபு, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விஜய் பாபு உடனடியாக கேரளா திரும்பி விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும், 7ம் தேதி (நாளை) வரை அவரை கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் கேரளா திரும்பிய அவர், கொச்சி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் 2 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் துபாயில் இருந்தபோது பிரபல மலையாள நடிகர் ஷைஜூ குரூப், அவருக்கு கிரெடிட் கார்டு கொண்டுபோய் கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ஷைஜூ குரூப்பிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்தனர்.அதன்படி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, விஜய் பாபுவுக்கு கிரெடிட் கார்டு கொண்டு கொடுத்தது உண்மைதான் என்று அவர் கூறினார். தான் துபாய் செல்லும்போது விஜய் பாபுவின் மனைவி தன்னை சந்தித்து கிரெடிட் கார்டை அவரிடம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும், அப்போது விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் போலீசில் கூறியுள்ளார்.

Related Stories: