8 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி: தென் கொரியாவுடன் இணைந்து அதிரடி

சியோல்: வடகொரியா நடத்திய 8 ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா நேற்று 8 ஏவுகணை சோதனைகளை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள், உலக நாடுகளின் பொருளாதார தடைகள் என எதையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக வடகொரியா தொடர்ந்து பல நவீன ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில், வட கொரியா நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 ஏவுகணைகளை பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவை வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கின் வடக்கில் உள்ள 2 தீவுகளில் இருந்து 35 நிமிடங்களில் ஏவப்பட்டது. இது இந்த ஆண்டில் வட கொரியா நடத்திய 18வது ஏவுகணை சோதனையாகும்.

வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகளையொட்டி அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகியவை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. மேலும் இந்த விவகாரம் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வடகொரியாவுக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்கா, தென் கொரியாவுடன் இணைந்து 8 ஏவுகணை சோதனைகளை நேற்று நடத்தியது. இவை தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கி, வான் மற்றும் கடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 10 நிமிட இடைவெளிக்கு ஒன்று என்ற வீதத்தில் ஏவப்பட்டதாக அமெரிக்கா மற்றும் தென் கொரிய கூட்டுப் படைகளின் தலைமை தளபதி தெரிவித்தார். வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக தென் கொரியா, அமெரிக்கா இணைந்து 8 ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: