×

புரளிகளுக்கு முற்றுப்புள்ளி ரூபாய் நோட்டுகளில் மாற்றம் எதுவுமில்லை: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

புதுடெல்லி:  ‘ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை’ என பல்வேறு புரளிகளுக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம் மட்டுமே இடம்பெற்று வருகிறது. இதற்கிடையே, முதல்முறையாக மற்ற தலைவர்களின் உருவப்படத்தையும் அச்சிட ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. அதேநேரத்தில், ரூபாய் நோட்டுகளில் வழக்கமான இடத்தில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும். வாட்டர் மார்க் எனப்படும் மறைவாகத் தெரியும் வகையில் காந்தி படம் இருக்கும் இடத்தில் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை வெளியிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்துவருகிறது என தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்த தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தலைமை பொதுமேலாளர் யோகேஷ் தயாள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக இதர தலைவர்களின் புகைப்படம் இடம்பெறுவதற்கு ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இத்தகைய முயற்சிகளை அல்லது ஆலோசனைகளை ரிசர்வ் வங்கி தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



Tags : No change in rupee notes to end hoaxes: Reserve Bank scheme
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு; நாளை விசாரணை!