மதுராந்தகத்தில் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தும் பணி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

மதுராந்தகம் :மதுராந்தகம் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார்.செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரி மதுராந்தகம் ஏரி.  கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு  தூர்வாரப்பட்டது. அதன்பிறகு தூர் வாரப்படவில்லை. எனவே, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.  இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர். அதன் அடிப்படையில் இந்த ஏரிக்கு தூர்வார தமிழ்நாடு அரசு  ரூ120.24 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், இந்த ஏரியினை ஆழப்படுத்தி கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்குகளை கதவடையுடன் கூடிய உபரி நீர் போக்கியாக கட்டமைக்கும்  பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மதுராந்தகம் கோட்டாட்சியர் சரஸ்வதி, பொதுப்பணி நீர்வளத் துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் குமார், திமுக மாவட்ட துணை செயலாளர் தசரதன், மதுராந்தகம் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் சத்திய சாய் ராமச்சந்திரன், சிவகுமார், குமார், உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘கடந்த 60 வருடங்களாக தூர்வாரப்படாததால் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்டுவரும் மண் அரிப்பால்  ஏரியில் வண்டல் மண் படிந்து சுமார் 24% கொள்ளளவு குறைந்துள்ளது. ஏரியின் மதகுகள் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மேம்படுத்தப்பட உள்ளது. ஏரியை ஆழப்படுத்துவதின் மூலம் கிடைக்கும் மிகை மண் ஒரு பகுதியை ஏரியின் கரைகளை பலப்படுத்தவும் ஏரியின் அருகில் தாழ்வாக உள்ள நிலங்களை உயரத்தை உயர்த்தவும் மிகை மண் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த ஏரி தூர்வாருதல் மூலமாக 3500 விவசாயக் குடும்பங்கள் 9 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள்’’ என்றார்.

Related Stories: