×

ஆபாசமாக பேசி ஆன்லைன் விளையாடிய பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பப்ஜி மதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தையடுத்தை ஜாமீன் மனுவை மதன் தரப்பு வழக்கறிஞர் வாபஸ் பெற்றார். ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழிக்கு கொண்டு செல்வதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பப்ஜி மதன் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவினரால், 2021 ஜூன் 18ம் தேதி தர்மபுரியில் மதன் கைது செய்யப்பட்டார். பின்னர் சைபர் சட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விளையாட்டின்போது பேசிய வார்த்தைகளை மட்டுமே காரணம் காட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் விளையாட்டில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பண மோசடி செய்த தொகையில் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாயும், 2 கார்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. விருப்பப்பட்டு விளையாட்டில் சேர்ந்தவர்களிடம் மட்டுமே விளையாட்டின் மூலம் உரையாடினார். விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையிலேயே உள்ளது. அவர் 316 நாட்களாக சிறையில் உள்ளார் என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில், விளையாட்டில் கலந்து கொண்டவர்களிடம் கொரோனா நிதி என கூறி 2 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூலித்து மதன் மோசடி செய்துள்ளார்.

விளையாட்டில் சேரும் சிறுவர்களை தவறான வழியில் நடத்தியுள்ளார் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் தவறாக பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் தற்போதைய நிலையில் மதன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்யவுள்ளோம் என்றார். இதையடுத்து, ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக மதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவை வாபஸ் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Babji Madan , Babji Madan's bail plea dismissed for playing obscene online
× RELATED பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல்...