புதுடெல்லி: பாடகர் கே.கே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (53) கொல்கத்தாவில் நஸ்ருல் மான்ச்சில் கடந்த மாதம் 31ம் தேதி நடந்த நிகழ்ச்சி பாடிய போது மாரடைப்பால் உயிரிழந்தார். கே.கே உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கறிஞர் ரவிசங்கர் சட்டோபாத்யாய் என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கே.கே கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 2 நாட்கள் தங்கியிருந்து பாடினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கச்சேரி முடித்து வெளியேறிய வீடியோக்கள் வெளியானது. அதில் கேகேவுக்கு அதிக அளவிலான வியர்வை வெளியேறுவதும், அவர் சோர்வுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதனால் இதுதொடர்பான உண்மை நிலவரம் அறிய வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என தெரிவித்துள்ளார். மனுவை நேற்று பரிசீலனை செய்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.