ரஷ்யாவில் இருந்து கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு 2வது முறை எரிகோல் வருகை

நெல்லை: ரஷ்யாவிலிருந்து கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் 2வது முறையாக நேற்று முன்தினம் இரவு வந்து சேர்ந்தது. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 3, 4, ஆகிய இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த அணு உலைகளில் அடுத்த ஆண்டு அதாவது 2023ல் மின்சாரம் உற்பத்தி செய்ய இந்திய அணு சக்தி கழகம் திட்டமிட்டுள்ளது.

இது தவிர 5, 6 அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் கூடங்குளத்தில் 6 ஆயிரம் மெகாவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலைகளில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரோஸாட்டம்  மூலம் 60 ஆண்டுகள் தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த  2018 ஜூன் 29ம் தேதி இறுதியாக மாஸ்கோவில் இருந்து எரியூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் கூடங்குளம் வந்தது.

4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 27ம் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு யுரேனியம் எரிகோல்கள் ரஷ்யாவில் இருந்து வந்தது. அடுத்த கட்டமாக நேற்று முன்தினம் இரவு மாஸ்கோவில் இருந்து  தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் 3 டிரெய்லர் லாரிகளில் மிகுந்த பாதுகாப்புடன் கூடங்குளம் வந்து சேர்ந்தது. ஒவ்வொரு எரிகோலும் 4.57 மீட்டர் நீளமும், 705 கிலோ எடையும் கொண்டது. ஒவ்வொரு அணு உலையிலும் 163 எரிகோல்கள் ஒரு பண்டல் போல் உருவாக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். தற்போது வந்துள்ள எரிகோல்கள் கூடங்குளம் 1, 2, அணு உலைகளில் பயன்படுத்தப்பட உள்ளன. எரிபொருள் மாற்றத்தின் போது இவை பயன்படுத்தப்பட உள்ளன.

Related Stories: