ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் பலத்த காற்றுடன் கன மழை: மரம் விழுந்து பெண் பலி; வாழை மரங்கள் நாசம்

வேலூர்: ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பேய் மழை பெய்தது. மரம் விழுந்து பெண் பலியனார். மேலகுப்பத்தில் 20 ஹெக்டேர் வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. தமிழகத்தில் நேற்று முன்தினம் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியதால், விவசாய பயிர்கள் சாய்ந்து நாசமானது. குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவிற்கு உட்பட்ட மேலகுப்பம் பகுதியில் சுமார் 20 ஹெக்டேரில் விவசாயிகள் வாழை பயிரிட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், மேலகுப்பம் கிராமத்தில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்து நாசமானது. வாழைப்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதில் மாதனூர், பாலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மாதனூர் அடுத்த பாலூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டுவாம்பட்டியை சேர்ந்த விவசாயி வெங்கடேசனின் மனைவி சரஸ்வதி (45), தங்களது விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், அருகில் இருந்த மாட்டு கொட்டகையில் மழைக்கு ஒதுங்கினார். அப்போது சூறாவளி காற்று வீசியதில் அருகில் இருந்த ஒரு மரம் கொட்டகை மீது விழுந்தது. இதில் கொட்டகை சரிந்து சரஸ்வதி சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார்.

Related Stories: