தென் சீனக் கடலின் சர்வதேச வான்வெளியில் ஆஸ்திரேலிய உளவு விமானம் மீது அலுமினிய துகள்களால் தாக்கிய சீனா; ஆஸி. கண்டனம்

சிட்னி: தென் சீனக் கடலின் சர்வதேச வான்வெளியில் ஆஸ்திரேலிய உளவு விமானம் மீது அலுமினிய துகள்களால் சீன விமானம் தாக்கிய சம்பவத்திற்கு, ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தென் சீனக் கடலை சுற்றியுள்ள பகுதியின் சர்வதேச வான்வெளியில் வழக்கமான ரோந்துப் பணியில் சீன விமானப்படையின் ஜே-16 விமானம் ஈடுபட்டிருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானமான பி-8ஏ பொஸிடான் என்ற விமானமும் பறந்து கொண்டிருந்தது. அப்ேபாது திடீரென ஆஸ்திரேலிய உளவு விமானத்தை வழிமறிக்கும் வகையில் சீன விமானம் பறந்துள்ளது. மேலும், சீனாவின் ஜே-16 விமானம், ஆஸ்திரேலிய விமானத்தின் மீது அலுமினிய துகள்களை பறக்கவிட்டுள்ளது.

அதையடுத்து பின்வாங்கிய ஆஸ்திரேலிய விமானம், சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பியது. இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவின் ஜே-16 ஜெட் விமானம், சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய விமானத்தை வழிமறித்து கூர்மையான அலுமினிய துகள்களை வெளியேற்றியது. சீன விமானத்தின் இந்த செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது என்று விரும்புகிறோம். இவ்விவகாரம் தொடர்பாக சீன அரசிடம், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் எடுத்துக் கூறினார். எங்களது விமானம் சர்வதேச சட்டவிதிகளின்படிதான் வான்வெளியில் பறந்தது’ என்று தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலிய விமானப்படை வட்டாரங்கள் கூறுகையில், ‘சீன ராணுவ விமானங்கள் வான்வெளியில் பறக்கும்போது ரசாயன குப்பைகளை விட்டுச் செல்கின்றன.

அலுமினியம் அல்லது துத்தநாகத்தின் சிறிய துகள்களை பறக்கவிட்டு செல்கின்றன. எதிரே வரும் விமானத்தை நிலைகுலைய செய்ய வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற செயல்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால் விமானத்தின் இன்ஜினை அலுமினிய, துத்தநாக துகள்கள் துளையிட்டு தீயை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்தும். சீன அரசாங்கத்திடம் விசயத்தை எடுத்துக் கூறியும், இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வமான பதிலையும் அளிக்கவில்லை. இதற்கு முன், கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவின் கண்காணிப்பு விமானமான இபி-3 என்ற விமானத்தின் மீது, சீன கடற்படை விமானம் மோதியதில், சீன விமானி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க விமானத்தின் ஊழியர்கள் சிலரை, கிட்டதட்ட 10 நாட்களாக சீனா சிறைபிடித்து வைத்திருந்தது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: