×

குன்னூரில் அரசு தேயிலை தோட்டக்கழக தொழிலாளர்கள் போராட்டம்: ஊதிய உயர்வை ரூ.425 ஆக உயர்த்த தமிழக அரசிற்கு கோரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஊதிய உயர்வு வழங்ககோரி 100-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் வால்பாறை பகுதிகளில் அரசு தேயிலை தோட்ட கழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினக்கூலியாக இவர்கள் ரூ.340 பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி குன்னூரில் அரசு தேயிலை தோட்ட கழக அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே பணியாற்றி வரும் தங்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.425 ஆக உயர்த்தி தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து லாபம் பார்த்து வரும் நிர்வாகம் ஊதிய உயர்வு தர மறுப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அரசு தங்கள் பிரச்சனைகளில் தலையிட்டு ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.425 ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கண்டனம் பேரணி நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சங்கங்கள் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பந்தலூர் பஜார் சாலையில் கோரிக்கைகளுடன் பேரணி சென்ற அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.         


Tags : Gunnur ,Tamil Nadu Government , Coonoor, Tea Estate, Trabajo, Lucha, Aumento de salarios, Gobierno de Tamil Nadu
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...