×

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து ஐகோர்ட்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்கைதிகளாக இருக்கக்கூடிய நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்திருந்தது. அரசு அனுப்பிய தீர்மானத்தில் எந்தவொரு முடிவும் எடுக்காமல் தாமதித்து வந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திராமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினியும், தீர்மானத்தின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று ரவிச்சந்திரனும் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற தீர்மானத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததும், இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் சட்டவிரோதமானது. எனவே ஆளுநருடைய செயல்பாட்டை உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவிக்கலாம் என வாதிட்டார். மேலும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால், மீண்டும் அதனை ஆளுநருக்கு அனுப்பி வைக்க கூடாது என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட தலைமை நீதிபதி உச்சநீதிமன்றம் போன்று விடுதலை செய்வது தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை; அதற்கு உச்சநீதிமன்றத்தையே நாட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், விடுதலை செய்யக் கோரவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிட கோருவதாகவும், அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். குடியரசு தலைவர் இன்னும் ஆவணங்களை ஆளுநருக்கு அனுப்பவில்லை. அவ்வாறு அனுப்பினாலும் இதுதொடர்பாக ஆளுநர் உத்தரவிட முடியாது என்பதால் நளினியை விடுதலை செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018-இல் அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டார்.

ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாக கூறிய அவர், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றமே பரிசீலிக்கலாம் எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல்,தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.     


Tags : Former ,Rajiv Gandhi ,Nalini ,Ravichand , Rajiv Gandhi, Asesinato, Nalini, Ravichandran, Sentencia, CPI
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...