×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

உருளைக்கிழங்கு போண்டா செய்வதுபோல, காய்கறி போண்டா செய்யலாம். எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் வெஜிடபிள் போண்டா ரெடி. சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கொதிக்கும் தண்ணீரில் சிறிது வெந்த பாசிப்பருப்பை சேர்க்கவும். பிறகு கோதுமை ரவையைப் போட்டு கோதுமை உப்புமா செய்தால் சுவையாக இருக்கும்.தேங்காய் சாதத்தில் வேர்க்கடலையை ஒன்றிரண்டு பொடி செய்து போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.ரசம் கொதித்து வந்ததும் அதை இறக்கும் முன்பு ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடி தூவி இறக்கினால் மணமாக இருக்கும்.

- கவிதா, சிதம்பரம்.

உருளைக்கிழங்கு வேக வைக்கும்பொழுது சிறிது உப்புடன் சேர்த்து வேக விட்டால் கிழங்கு வெடிக்காமல் நல்ல பதமாக இருக்கும்.

நீங்கள் செய்யும் தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்கள் செம ருசி வேண்டுமா? அதற்கு பொட்டுக்கடலையை நன்கு வறுத்துப் போட்டுக் கிளறினால் ருசியோ ருசி.

கொத்தமல்லி விதையை வறுத்துப் பொடி செய்து சாம்பார் கொதித்து வரும்போது ஒரு கரண்டி போட்டு இறக்கினால் மணம் வாசல் வரை மணக்கும்.

- ஹேமலதா, தஞ்சை.

பூரி மென்மையாக வேண்டுமென்றால் மாவை பிசையும்போது இரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துக்கொண்டால் மென்மையாக ருசியாக இருக்கும். லட்டு பிடிக்கும்போது, ஏதாவது பழ எசென்ஸை விட்டுக் கலந்து பிடித்தால், லட்டின் சுவையும், மணமும் கூடும்.

ரவா லட்டு செய்யும்போது அத்துடன் அவலையும் மிக்ஸியில் ரவை போல் பொடித்து நெய்யில் வறுத்துச் சேர்த்து 4 டீஸ்பூன் பால் பவுடரையும் கலந்து சுவையான லட்டு உருவாக்கலாம்.

- கே.ஆர்.இரவீந்திரன், சென்னை.

துருவிய தேங்காயை மிக்ஸியில் பால் விட்டு அரைத்து தேங்காய் பர்ஃபி் தயாரித்தால் வெள்ளையாகவும், மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
கார்த்திகை தீபநாளில் பலரும் அப்பம் தயாரிப்போம். முதலில் வெல்லத்தைப் பொடி செய்து தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரைத்து ஆறிய பிறகு கோதுமை மாவு, ஏலப்பொடி சேர்த்து அப்பம் செய்தால் சுவையாக இருக்கும்.முறுக்கு மாவிற்கு வெண்ணெய் சேர்க்க விரும்பாதவர்கள், கடலை எண்ணெயை ஒரு இலுப்பை கரண்டியில் காய்ச்சி அதை மாவில் சேர்த்து முறுக்கு தயாரித்தால் கரகரவென்று வரும்.

ஓய்வாக இருக்கும்போது வெல்லத்தை பொடி செய்து வைத்தல் மற்றும் சீனியை பொடி செய்து வைத்துக்கொண்டால் பலகாரங்கள் செய்யும்போது சுலபமாகச் செய்யலாம்.

- இந்திரா, திருச்சி.

தேங்காயை சிறு துண்டுகள் ஆக்கி தயிரில் போட்டு வைத்தால் மூன்று நாட்கள் வரை புளிக்காமல் இருக்கும்.தோசை மாவில் நான்கு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஊற்றினால் மிருதுவாக இருக்கும்.

-எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

துவரம்பருப்பை வேக வைக்கும்போது அதனோடு ஒரு தேங்காய்த்துண்டு போட்டு வேக வைத்தால் விரைவில் பருப்பு வெந்துவிடும். சிறிது கசகசாவை வறுத்து பொடி செய்து பருப்பு பொடியுடன் சேர்த்தால் குழம்பும், கூட்டும் கெட்டியாய் இருக்கும். கவரில் பெருங்காயத்தை இட்டு மூடி அதை பருப்பு அல்லது அரிசி உள்ள டப்பாவில் இடவேண்டும். பின் அந்தப்பெருங்காயத்தை வெளியே எடுத்து உடைத்தால் விரைவில் உடையும்.கேரட், பீட்ரூட் ஆகியன வாடி விட்டால் அவற்றை உப்புக்கலந்த நீரில் அரைமணி நேரம் வைத்தால் அவை புதியன போல் ஆகிவிடும்.

- உமா மகேஸ்வரி, வேலூர்.

வடை மாவுடன் கைப்பிடி அளவு ரவையைச் சேர்த்து செய்தால் வடை ‘மொறுமொறு’வென இருக்கும்.புழுங்கலரிசியை ஊற வைத்து அரைத்த மாவுடன் சம அளவு பொட்டுக்கடலை மாவு, உப்பு, சீரகம், எள் சிறிதளவு, நெய் சேர்த்துப் பிசைந்து முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.

- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

சாண்ட் விச் உள்ளே வைக்கும் காய்கறிகளையும், மசாலாவையும் முதலிலேயே தயாரித்து வைக்க விரும்புபவர்கள் உப்பையும், மசாலாவையும் அப்போதே வைத்துவிடக்கூடாது. டேஸ்ட் குறைந்துவிடும். எப்போது பரிமாறுகிறீர்களோ அதற்கு சற்றுமுன்பு காய்கறியில் மசாலாவையும், உப்பையும் கலந்து வைக்க வேண்டும்.

இட்லி, தோசை மாவு அரைத்தது புளித்துவிட்டால் பொங்கிவிடும். அப்படிப் பொங்காமல் இருக்க வாழைத்தண்டை மாவின் நடுப்பகுதியில் வைத்துவிட்டால், வாழைத்தண்டு உயரத்திற்கு மேல் மாவு பொங்கி வராது.

காலிஃப்ளவரைச் சமைக்க அரைமணி நேரம் முன்னதாக பூக்களைப் பிய்த்து, அவை மூழ்கும்வரை நீர் எடுத்து, அதில் 2 தேக்கரண்டி உப்பும், ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடியையும் கலந்து கலக்கி, அதில் பூக்களை விட்டு அரை மணி நேரம் கழித்து எடுத்தால் அதில் இருக்கும் பூச்சிகள் எல்லாம் செத்துவிடும்.

- அமுதா அசோக்ராஜா, அசூர்.

கிறிஸ்துமஸ் கேக் டிப்ஸ்

கேக் செய்யத் தொடங்கும் முன்பு பேசிங்

ஓவன் தட்டில் நெய் சரியாகத் தடவப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.
கேக்குக்கு மிருது தன்மையும், மணமும் கிடைக்க ஆரஞ் சுபழச்சாறு சேர்க்கவும்.
கேக் பேக் செய்யும்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே பேசிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

கேக் தயாரிக்கும்போது, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பொருட்களைப் பாலில் ஊற வைத்து பிறகு சேர்த்தால் அவை கேக்கிலிருந்து உதிராமல் இருக்கும்.கேக் மாவு கலக்கும்போது சீராக கலக்க வேண்டும்.கேக்குகளை பெரிய டின்களில் வைத்து, ஆரஞ்சுப்பழத்தோல் போட்டு காற்று புகாமல் மூடி வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.கேக் செய்ய தேவைப்படும் பொருட்களை அளந்து வைத்து, பிறகு செய்ய வேண்டும்.

- எஸ். ராஜம், திருச்சி.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!