அவதூறு கருத்து கூறிய பாஜக நிர்வாகிகள் கத்தார், குவைத்தை தொடர்ந்து ஈரானும் சம்மன்; சர்வதேச அளவில் சமூக ஊடகங்களில் கண்டனம்

புதுடெல்லி: நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார் மற்றும் குவைத் நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டது இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இரு குழுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இவ்விவகாரம் அரபு நாடுகளிலும் எதிரொலித்தது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது என பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து குறித்து உரிய விளக்கமளிக்க இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பியது. கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய தூதர் தீபக் மிட்டல் கூறுகையில், ‘சம்பந்தப்பட்டவர்களின் அந்தப் பதிவுகள் இந்தியாவின் கருத்துகள் அல்ல; அந்தக் கருத்துகள் விஷம சக்திகளின் கருத்துகள்’ என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச அளவில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகி வருகின்றன.

Related Stories: