இந்திய அரசு எல்லா மதங்களையும் உச்சபட்ச மரியாதையுடன் நடத்துகிறது... இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்

டெல்லி : இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிப்பதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய டிவி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார்.நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கி பாஜ தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல், டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரை கட்சியில் இருந்து பாஜ நீக்கி உள்ளது.

இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவினரின் இந்த கருத்தை கடுமையாக கண்டிப்பதாகவும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய சின்னங்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டி இருந்தது.

இந்த நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை எழுதியுள்ள கடிதத்தில்,இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கிறது. இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது.ஒரு மத ஆளுமையை இழிவுபடுத்தும், புண்படுத்தும் ட்வீட்கள் மற்றும் கருத்துக்கள் சில நபர்களால் செய்யப்பட்டன. அவை எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. மதவெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் பேசிய நபர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட கட்சிகளால் ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த பிறகும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு பிளவுபடுத்தும் நோக்கில் உள்நோக்கத்துடன் கருத்து வெளியிடுகிறது. இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு வகுப்புவாத அணுகுமுறையை நிறுத்திக் கொள்ளும்படி வலியுறுத்துகிறோம்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: