×

நெல்லை - பெங்களூருக்கு மதுரை, தென்காசி வழியாக புதிய ரயில் இயக்கப்படுமா?

* தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

மதுரை : திருநெல்வேலி - பெங்களூருவுக்கு மதுரை, தென்காசி வழியாக புதிய ரயில் இயக்கப்பட வேண்டுமென தென்மாவட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர். பெங்களூருவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்தில் உருவாகியுள்ள முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட இந்தியாவின் முதல் ரயில் நிலையமாக, பையப்பனஹள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சர் விஸ்வேஸ்வரய்யா பெங்களூரு புதிய முனையம் இன்று (ஜூன் 6) திறக்கப்பட உள்ளது.

இந்த புதிய முனையத்தால் பெங்களூரு ரயில் நிலையத்தில் ஏற்பட்டு வந்த கடும் இடநெருக்கடிக்கு தீர்வு கிடைத்துள்ளது. புதிய முனையத்தில் 7 நடைமேடைகள், 3 ரயில் பராமரிப்பு பிட் லைன்கள், பராமரிப்பு பணிகள் முடிந்த பின் ரயில்களை பார்க்கிங் செய்ய 8 ஸ்டேப்லிங் லைன்களும் உள்ளன.

ஜூன் 2வது வாரத்தில் ஒடிசா மாநிலம், பூரியில் நடைபெறும் 2022-23ம் ஆண்டு ரயில் கால அட்டவணை கலந்தாய்வு கூட்டத்தில் திருநெல்வேலி - பெங்களூரு இடையே பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை, நாமக்கல், சேலம் வழியாக புதிய ரயிலை, ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே மற்றும் தென்மேற்கு ரயில்வே முன்மொழிய வேண்டும் என்று தென்மாவட்ட மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 தற்போது, திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு தெற்கு ரயில்வே, சிறப்பு ரயில்களை இயக்கி வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சிறப்பு ரயில்களை போலவே திருநெல்வேலியில் இருந்து பெங்களூருவிற்கும் மதுரை, தென்காசி வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தென்மாவட்ட மக்கள் அலைச்சல் குறையும்

அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், சுற்று வட்டாரப்பகுதி மக்கள் பெரும்பாலோனார் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளுக்கு பல்வேறு பணிநிமித்தமாக சென்று வருகின்றனர். தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பேருந்துகளில் மிக அதிக தொகை கொடுத்து தங்கள் ஊர் செல்லும் நிலைதான் உள்ளது. தென்காசி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மேற்கு பகுதி மக்கள், பெங்களூரு செல்ல திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு சென்று நாகர்கோவில் - பெங்களூரு ரயிலை பிடிக்க வேண்டும். அதேபோல் சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி பகுதி மக்கள், பெங்களூரு செல்ல கோவில்பட்டி அல்லது விருதுநகர் ரயில்நிலையம் சென்று தூத்துக்குடி - மைசூரு ரயிலை பிடிக்க வேண்டும்.

இதனால் தேவையற்ற பணவிரயமும் காலவிரயமும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், ‘‘பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பெங்களூருவில் காலியாக நிற்கும் ரயில் பெட்டிகளை கொண்டு பெங்களூரு - திருநெல்வேலி இடையே மதுரை, தென்காசி வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். ஏற்கனவே பெங்களூரு - திருநெல்வேலி இடையே தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்களுக்கு அதிக வரவேற்பு இருந்துள்ளது’’ என்றார்.

Tags : Nella ,Bangalore ,Madurai ,South Kasi , Tirunelveli - Bengaluru Train SHould ran via Madurai,Tenkasi
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்