கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி இன்று துவங்கியதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, உப்புக்காற்றினால் சேதமடைவதை தவிர்க்க ரசாயன கலவை பூசும் பணி இன்று தொடங்குகிறது. கன்னியாகுமரியில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறக்கப்பட்ட 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையானது உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சுமார் 1 கோடி ரூபாய் செலவில் ரசாயன கலவை பூசும் பணியானது இன்று துவங்கியுள்ளது. சுமார் 7000 டன் கற்கள் கொண்டு திருவள்ளுவர் சிலையானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலையானது உப்புக்காற்றினால் சேதமடையாமல் இருக்க, இன்று தொடங்கி 5 மாதங்கள் வரை ரசாயன கலவை பூசும் பணியானது நடைபெறுகிறது. நவம்பர் மாதத்தில் பணியானது நிறைவு பெறும் என நிர்வாகம் தகவல் தெரிவித்தது. 133 அடி உயர சிலையில் பணி நடைபெறுவதற்கு வசதியாக அதனை சுற்றி இரும்பு வேலிகள் கொண்டு சாரங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர் உப்புக்காற்றினால் சிலையின் ஒருசில பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பொருட்டு சுண்ணாம்பு கடுக்காய் கலவை பூசும் பணி 1 மாதம் வரை நடைபெறும்.

அதனை தொடர்ந்து கெமிக்கல் வாஷ் எனப்படும் வாட்டர் வாஷ் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பேப்பர் காகிதங்களை கொண்டு சிலையின் மீது படிந்துள்ள உப்புக்களை நீக்கும் பணியானது மேற்கொள்ளப்படும். இறுதியாக ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்படும் பாலி சிலிகான் என்னும் கலவை சிலை முழுவதும் பூசப்பட்டு, மீண்டும் சிலை மீது வாட்டர் வாஷ் செய்து சுத்தம் செய்யப்படும். சுமார் 5 மாதங்கள் வரை நடைபெறும் இந்த பணியானது ரூ.1 கோடி செலவில் துவங்குகிறது. இதனால், இந்த பணிகள் முடியும் வரை திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: