×

பதப்படுத்தப்பட்ட மீன் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு!: வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை..!!

சென்னை: வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை பொறுத்தவரையில் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்குவதற்கு ஏராளமாகக் கூடுவது வழக்கம். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான மக்கள் போட்டிபோட்டு கொண்டு வாங்கி செல்வர். பெரிய வகை மீன்கள் முதல், சிறிய அளவிலான மீன்கள் விலை பல ரகங்களில் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று பிடித்து வரும் மீன்களை மட்டுமே விற்பனை செய்வதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களை விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது வெகு நாளாக அமலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் மீன்பிடி தடைகாலத்தின் காரணமாக பெரிய விசை படகுகள் கடலுக்குள் செல்ல இயலாத நிலையில், காசிமேடு வியாபாரிகள் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன்களை வாங்கி கொண்டுவந்து காசிமேட்டில் விற்பனை செய்வதாகவும், அவ்வாறு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து கொண்டுவந்த மீன்களை விற்பனை செய்வதால் மீன்களின் தரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் எதிரொலியாக பதப்படுத்தப்பட்ட மீன்களை விற்பனை செய்வதால் இந்த தடையானது காசிமேட்டில் அமலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய சங்கங்களின் சார்பாக கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தடையை மீறி வெளிமாநில மீன்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும், மீன்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மீனவர் சங்கங்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Kasimedu , Outlandish fish, Kasimedu fishing port, prohibited
× RELATED காசிமேடு அருகே மீன் பிடித்தபோது...