×

இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் பாஜக நிர்வாகிகள் சர்ச்சை பேச்சு.. இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் : குவைத் அரசு வலியுறுத்தல்!!

புதுடெல்லி: நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் சர்ச்சை கருத்தால் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கத்தார், குவைத், ஈரான் அரசுகள் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர். பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய டிவி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். இதை கண்டித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.இந்நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கி பாஜ தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல், டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரை கட்சியில் இருந்து பாஜ நீக்கி உள்ளது.

இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் விமர்சனத்தை கண்டித்த வளைகுடா நாடுகள், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியுள்ளன. சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் போன்ற நாடுகளில் கடைகளில் இருந்து இந்திய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. சில கடைகளில் இந்திய பொருட்களை தடை செய்யப்பட்ட பொருட்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டி மூடிவைத்துள்ளன. கத்தார், குவைத், ஈரான் ஆகிய நாடுகளின் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் பாஜக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்காக இந்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று குவைத் அரசு வலியுறுத்தி உள்ளது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசுவது மத சுதந்திரத்தை மீறும் செயல் என்று ரஷ்ய அதிபர் புதினும் கண்டித்துள்ளார்.


Tags : BJP ,Islamists ,Government of India ,Government of Kuwait , Islamists, BJP, executives, controversy
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...