சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற சரக்கு ரயில் மீது ஏறி பயணித்தவரால் பரபரப்பு: 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்

ஆலங்காயம், ஜூன் 6: சென்னையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட, சரக்கு ரயில் நேற்று காலை 6 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் மீது 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பயணித்தார். இதனைக்கண்ட விண்ணமங்கலம் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அந்த ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வந்ததும் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது வந்த நபர், உயரழுத்த மின் வயர் அருகே இருந்ததால் உடனடியாக மின் இணைப்பை ரயில்வே அதிகாரிகள் துண்டித்தனர். பின்னர் ரயில்வே போலீசார் சென்று அந்த நபரை கீழே இறங்கும்படி கூறினர்.

ஆனால் அவர் இறங்க மறுத்ததோடு மனநலம் பாதித்தவர்போல் பேசியுள்ளார். இதையடுத்து வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு கூட்டம் அதிகரித்தது. அப்போது அந்த நபர் திடீரென இறங்கி தப்பியோடிவிட்டார். இதையடுத்து மீண்டும் மின் இணைப்பு வழங்கி சுமார் 30 நிமிடம் கழித்து சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் காரணமாக வாணியம்பாடி வழியாக செல்ல வேண்டிய ஆலப்புழா உள்ளிட்ட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் தவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: