×

திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சென்னை: திமுக இளைஞர் அணி சார்பில் ‘கலைஞர்-99’ கருத்தரங்கு மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, தாயகம் கவி எம்எல்ஏ, எஸ்.ஜோயல், பைந்தமிழ்பாரி முன்னிலை வகித்தனர். திராவிட மாடல் பயிற்சி பாசறையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்து, தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பிலான பயிற்சி பாசறையில் பங்கேற்கவுள்ள 20 கருத்துரையாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய திமுக மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா எம்எல்ஏ, எபினேசர் எம்எல்ஏ, ராஜா அன்பழகன், மகேஷ், பிரகாஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது: 10 நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். மோடியை மேடையில் வைத்துக்கொண்டு இதுதான் திராவிடர்  ஆட்சி,  இது தான் மாநில சுயாட்சி என்று பிரதமர் மோடிக்கே தைரியமாக கிளாஸ் எடுத்தவர் தான் தலைவர். அதுதான் திராவிட மாடல் ஆட்சி. கலைஞர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், ஏற்கனவே இந்தியாவிலே நம்பர் ஒன் முதல்வர் என்று பெயர்  எடுத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து ‘கலைஞர்-99’ கருத்தரங்கு நடந்தது. இதில் ‘கலைஞரின் மாநில சுயாட்சி’ குறித்து திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, சமூக நீதிக்காக கலைஞர் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் குறித்து துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, கலைஞரின் கலை-இலக்கிய ஆற்றல் குறித்து திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், கலைஞரின் பொருளாதார சமத்துவம் குறித்து மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், கலைஞரின் பகுத்தறிவு குறித்து திராவிடர் கழகத்தின் மாநில பிரசார செயலாளர் வழக்கறிஞர்  அருள்மொழி உரையாற்றினர். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ரகுபதி, ராஜகண்ணப்பன், மூர்த்தி, பி.கே.சேகர்பாபு, சிவசங்கர், ராமச்சந்திரன், எம்பிக்கள் தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன், மேயர் பிரியா மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

* 20 கருத்துரையாளர்கள் யார் யார்?
தமிழகம்  முழுவதும் இளைஞர் அணி சார்பிலான பயிற்சி பாசறையில் பங்கேற்கவுள்ள 20  கருத்துரையாளர்களை உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அதில் எழுத்தாளர்கள் மதிமாறன், சூர்யா சேவியர், அசோக், பாலா, சூர்ய மூர்த்தி, பத்திரிகையாளர் கோவி லெனின், கலாநிதி வீராசாமி எம்பி, திமுக வெளிநாடுவாழ் இந்தியர் நல அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்பி, இணை செயலாளர் தர்மபுரி செந்தில்குமார், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கனிமொழி எம்பி, மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ, இளைஞர் அணி துணை செயலாளர் தாயகம் கவி எம்எல்ஏ, திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் எம்எல்ஏ, டாக்டர் எழிலன் எம்எல்ஏ, பொறியாளர் அணி துணை செயலாளர் கே.பி.கருணா, தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர்கள் தமிழன் பிரசன்னா, ராஜூவ் காந்தி, துணை செயலாளர் அமுதரசன், திராவிடர் இயக்கம் தமிழர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் உமா, வழக்கறிஞர் கணேஷ்பாபு இடம்பெற்றுள்ளனர்.

Tags : Dravida Model Training Course ,DMK Youth Team ,Udayanithi Stalin , Inauguration Ceremony of Dravida Model Training Course on behalf of DMK Youth Team: Udayanithi Stalin MLA
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்