×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம்? இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவால் பதற்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக மக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். அதனால் சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமாபாத்தில் ஏற்கனவே 144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் வதந்திகள் பரவிவருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு இஸ்லாமாபாத் காவல்துறை வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள பானி காலா என்ற குடியிருப்பு பகுதிக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி எந்தக் கூட்டமும் கூட அனுமதியில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இம்ரான் கானின் உறவினர் ஹசன் நியாசி கூறுகையில், ‘இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவ்வாறு ஏதேனும் நடந்தால், அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும்’ என்றார். முன்னதாக இம்ரான் கானின் கட்சித் தலைவர் ஃபவாத் சவுத்ரி கூறுகையில், ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு முகமைகள் தெரிவித்துள்ளன’ என்று தெரிவித்தார்.

Tags : Imran Khan ,Islamabad , Conspiracy to assassinate former Pakistani Prime Minister Imran Khan? Tension over 144 restraining orders in Islamabad
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு