பொம்மை துப்பாக்கி ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடிவிபத்து பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு; உயர்மட்ட விசாரணைக்கு உ.பி அரசு உத்தரவு

ஹாபூர்: உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் தவுலானா ெதாழில்துறை பகுதியில் செயல்படும் ரூஹி இண்டஸ்ட்ரி ரசாயன தொழிற்சாலையில் நேற்று மாலை கொதிகலன் வெடித்த சம்பவத்தில் நேற்று வரை 11 பேர் தீயில் கருகி பலியான நிலையில், இன்று பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் டெல்லி மற்றும் மீரட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஐஜி பர்வீன் குமார் கூறுகையில், ‘ரசாயன தொழிற்சாலையில் பொம்மை துப்பாக்கிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பவுடர் மூலமாக தீ விபத்து ஏற்பட்டு கொதிகலன் வெடித்திருக்க வாய்ப்புள்ளது.

சம்பவம் நடந்த போது கொதிகலன் வெடிப்புச் சத்தம் 10 கி.மீ தூரம் வரை கேட்டது. தொழிற்சாலையின் உரிமையாளர் தில்ஷாத் என்பரை பிடித்து விசாரித்து வருகிறோம். தொழிற்சாலை வளாகத்தில் பிளாஸ்டிக் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிறுவனம், மின்னணு உபகரணங்களைத் தயாரிப்பதற்காக கடந்தாண்டு உரிமத்தைப் பெற்றுள்ளது. இந்த தொழிற்சாலையை ஹாபூர் பகுதியை சேர்ந்த வாசிம் என்பவருக்கு தில்ஷாத் வாடகைக்கு கொடுத்துள்ளார். அதனால், வாசிமையும் பிடித்து விசாரித்து வருகிறோம்.

விபத்து சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். இந்த சம்பவம் குறித்து ஹாபூர் கலெக்டர் மேதா ரூபம் கூறுகையில்,  ‘தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.  இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தொழிற்சாலை விபத்தை தொடர்ந்து மற்ற தொழிற்சாலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.  அலட்சியத்தால் ெவடிவிபத்து சம்பவம் நடந்ததாக விசாரணையில் தெரியவந்தால்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.  இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: