வன விலங்குகள் பாதிக்கும் அபாயம்; பைக்காரா படகு இல்லத்தில் குவிந்துள்ள குப்பையை அகற்ற கோரிக்கை

ஊட்டி:  பைக்காரா படகு இல்லம் பகுதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனினும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. இது போன்று வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.

அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதுடன், அங்கு அமர்ந்து உணவு பொருட்களை உட்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக, வனங்கள் மற்றும் வனங்களை ஒட்டியுள்ள புல்வெளிகளில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை உட்க்கெண்டுவிட்டு, எஞ்சிய கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசிவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள பைக்காரா படகு இல்லம் செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்குள்ள பார்க்கிங் தளம் மற்றும் அணையின் கரையோரங்களில் அமர்ந்து உணவு உட்கொண்டுவிட்டு, கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக்குகளை அங்குள்ள குப்பை தொட்டிகளில் வீசிச் செல்கின்றனர்.

இந்த இப்பைகள் கடந்த பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால், பைக்காரா படகு இல்லத்தில் உள்ள பார்க்கிங் தளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. இதில் உள்ள உணவு பொருட்களை உட்கொள்ள வரும் வன விலங்குகள் இதனை அப்படியே உட்கொள்வதால், அவைகளின் வயிற்றுகள் பிளாஸ்டிக் கழிவுகள் சென்று அடைத்துக் கொண்டு அவைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துரு நாற்றமும் வீசுகிறது. எனவே, பைக்காரா படகு இல்லம் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அரசு துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: