பீகாரில் பாகிஸ்தான் உளவாளி; உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்

பாட்னா: பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர், பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பில் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாட்னா காவல்துறை அதிகாரிகள், பாகல்பூர் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், ‘பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர், இஷானிகா அஹிர் என்ற ெபயரில் பேஸ்புக் கணக்கு உருவாக்கியுள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்து பீகாரில் உள்ளவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரது மெயில் ஐடி கண்டுபிடிக்கப்பட்டு, எந்த ஐபி முகவரியில் இருந்து மெயில் ஐடி உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

பீகாரைச் சேர்ந்த அந்த நபர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பு கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அந்த நபர் மூலம் தீவிரவாத நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது அல்லது அவரிடமிருந்து தேவையான சில தகவல்களை பாகிஸ்தான் உளவாளி பெற்றுக் கொண்டிருக்கலாம். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். லாகூரில் இருந்து பீகார் நபருடன் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்தவரின் நோக்கம் என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: