தமிழகத்தில் என்றும் திமுகதான் ஆளுங்கட்சி; அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

திருவண்ணாமலை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கடந்த 3ம்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலையில் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3ம்தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 38 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.

மேலும் தாய்மார்களுக்கு பழம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக சார்பில் ஆண்டுதோறும் கலைஞர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதை வழக்கமாக செய்து வருகிறோம். இன்று 38 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மகிழ்ச்சியை காண்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

எதிர்கட்சியாக யார் இருப்பது என்பதில் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே போட்டி நடந்து வரும் நிலையில், தமிழகத்தில் எப்போதும் திமுகதான் ஆளுங்கட்சியாக இருக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திருவண்ணாமலை வர உள்ளார். தேதி உறுதியானவுடன் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: