ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு; ‘வலிமையுடன் இருங்கள்’..! பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற ஸ்வியாடெக் உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கை

பாரிஸ்: ‘உங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்னும் நீடிக்கிறது. வலிமையுடன் இருங்கள்’ என்று உக்ரைன் மக்களுக்கு பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றியுள்ள இகா ஸ்வியாடெக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாரிசில் நேற்று நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கும், அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ காப்பும் மோதினர். இதில் 6-1, 6-3 என நேர் செட்களில் கோகோ காப்பை வீழ்த்தி, மகளிர் ஒற்றையர் கோப்பையை ஸ்வியாடெக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2020ம் ஆண்டிலும் பிரெஞ்ச் ஓபனில் ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

வெற்றிக்கு பின்னர் ஸ்வியாடெக் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கடந்த 2020ம் ஆண்டு இதே கோப்பையை வென்ற போது, எனக்கே நம்பிக்கையில்லை. ஆனால் இம்முறை நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். இந்த வெற்றிக்கு பின்னால் என்னுடைய தந்தை, பயிற்சியாளர், உதவிய நண்பர்கள் மற்றும் எனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் என ஒரு டீமே உள்ளது. அவர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. முதலில் அவர்கள் அனைவருக்கும் நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் இந்த பைனலில் மோதிய கோகோ காப், சந்தேகமில்லாமல் சிறந்த வீராங்கனை. விரைவில் அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த தருணத்தில் உக்ரைன் மக்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். ஏனென்றால் போர் இன்னும் நீடிக்கிறது. ‘வலிமையாக இருங்கள்’ என்று உக்ரைன் மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் நான் தொடர்ந்து பங்கேற்று கொண்டிருந்த போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் துவங்கியது. இந்த பிரெஞ்ச் ஓபன் போட்டி துவங்குவதற்கு முன்னரே, ரஷ்யாவின் தாக்குதல் நிறுத்தப்பட்டுவிடும் என நம்பினேன். அந்த நம்பிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நீடிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஸ்வியாடெக் இவ்வாறு கூறியதும், அரங்கத்தில் இருந்த அனைவரும், எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி, அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த பைனலில் ஸ்வியாடெக் அணிந்திருந்த தொப்பியில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, உக்ரைன் நாட்டு கொடியை குத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: