×

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிக்கான முதல் நிலை தேர்வு; 861 இடங்களுக்கு 11 லட்சம் பேர் போட்டி.! தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் எழுதினர்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று காலை தொடங்கியது. இந்தியா முழுவதும் சுமார் 11 லட்சம் பேரும், தமிழகத்தில் 40 ஆயிரம் பேரும் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு கூடங்களில் மாணவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான(2022ம் ஆண்டுக்கான) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 861 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 2ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 11 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 5ம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்திருந்தது. அதன்படி சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 73 நகரங்களில் இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் நடந்தது.  சென்னையை பொறுத்தவரை எழும்பூர் மாநில  பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர், புரசைவாக்கம், வில்லிவாக்கம் உள்பட  பல்வேறு இடங்களில் இந்த தேர்வு நடந்தது. காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடந்தது.

வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இருந்தது.  தேர்வு எழுத காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு மாணவர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் எளிதாக சென்று வரும் வகையில் தேர்வு மையங்கள் உள்ள பகுதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.  

இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கான ரிசல்ட் 20 நாட்களில் வெளியிடப்பட்டது. அதே போல தற்போது நடைபெறும் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் இந்த மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வு ஜனவரி செப்டம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : IAS ,IPS ,Tamil Nadu , First level selection for post including IAS, IPS; 11 lakh people compete for 861 seats! 40 thousand people wrote in Tamil Nadu
× RELATED யுபிஎஸ்சி தேர்வுகளில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்