×

புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சென்று திரும்பும் சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் ‘4 நாள் கொண்ட சொகுசு கப்பல் சுற்றுலா’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் 2 நாட்கள் ஆழ்கடலில் இருக்கும் நிலையில், புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சென்று மீண்டும் சென்னை திரும்புகிறது. தமிழகத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் புதிய முயற்சியாக சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் தொடங்கப்படும் என்று பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்தார்.

அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி, விசாகப்பட்டினம் செல்லும் வகையில் சொகுசு கப்பல் பயணத் திட்டத்தை சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது. இதற்காக, தனியார் கப்பல் நிறுவனமான கோர்டேலியா  நிறுவனத்துடன் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்தியாவின் பெரிய சொகுசு கப்பல்களுள் ஒன்றான இந்த கப்பல் 11 தளங்கள் கொண்டதாக அமைந்துள்ளது. சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்ப ரூ.22,915  முதல் ரூ.2,37,000 வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.இந்த கப்பலில் பயணம் செய்ய  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படவேண்டும். 2 நாள், 3 நாள், 4 நாள், 5 நாட்கள் என பயண திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடலுக்கு செல்லும் சுற்றுலா திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து நேற்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை செயலாளர் சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன், கோர்டேலியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் வர்மா, கப்பல் தலைமை கேப்டன் டென்னிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சொகுசு கப்பலை சுற்றி பார்த்தார். அப்போது, கப்பலின் கேப்டன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

முன்னதாக இந்த கப்பலுக்கு வரும் பயணிகளை நெற்றியில் திலகமிட்டு, கப்பல் ஊழியர்கள் வரவேற்றனர். இதை தொடர்ந்து 2 நாள் பயணமாக சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றன. ஆழ்கடல் பகுதிக்கு 2 நாள் பயணமாக சொகுசு கப்பலில் சென்று வரும் இந்த சுற்றுலா திட்டத்துக்கு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் அதில் பயணம் செய்ய முன் பதிவு செய்தனர். கப்பல் பயணத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், பயணிகளை நோக்கி கையசைத்து பயணம் சிறப்புடன் இருக்க வாழ்த்து தெரிவித்தார். இந்த கப்பல் சென்னையில் புறப்பட்டு புதுச்சேரி, விசாகப்பட்டினத்திற்கு செல்கிறது. இந்த சொகுசு கப்பல் சேவை ஜூன் 4ம் தேதி முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை சுற்றுலா சேவை வழங்கப்படுகிறது.

* செப்டம்பர் வரை சென்னையில் சொகுசு கப்பல்
சொகுசு கப்பல் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட நிலையில், 2 நாள் பாண்டிச்சேரி செல்கிறது. இந்த கப்பல் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை சென்னையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சென்னையில் இருந்து இலங்கை கொழும்பு வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* என்னென்ன வசதிகள் உள்ளன?
11 மாடி கொண்ட சொகுசு கப்பலில் 1800 பேர் பயணம் செய்ய முடியும். இந்த கப்பலில் 600 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கப்பலில் 4 உணவகங்கள் உள்ளது. 796 அறைகள் உள்ளது. நீச்சல் குளம், ஜிம், தியேட்டர், நடன அரங்கம், மாஜிக் ஷோ அரங்கம் அமைக்கப்படுகிறது. பார் வசதி, ஸ்பா வசதிகளும் இந்த கப்பலில் உள்ளது. 4 வகையான அறைகள் உள்ளது. இன்ட்ரீயர் ரூம், வின்டோ ரூம் (ஒரே ஜன்னல்), ஓசன் வியூ (கடலை பார்ப்பது போன்று), மினி சூட் ரூம் ஆகிய 4 வகையான அறைகள் உள்ளது. இதில், 2 பேர் முதல் 4 பேர் வரை தங்கலாம். சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு, ஆழ்கடல் பகுதிக்கு செல்கிறது. 2 நாள் இரவு கடலிலேயே கப்பல் இருக்கும். திங்கள் கிழமை காலை துறைமுகத்துக்கு வருகிறது. ரூ.22,915  முதல் ரூ.2,37,000 வரை கட்டணம் செல்கிறது.

Tags : Chennai ,Pondicherry, Visakhapatnam ,Chief Minister ,MK Stalin , Luxury cruise tour in Chennai on return to Pondicherry, Visakhapatnam: Chief Minister MK Stalin initiates
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...